Sunday, January 16, 2011

பிரேசிலில் வெள்ளச்சாவு 1,000-த்தைத் தாண்டும்

பிரேசில் நாட்டில் ஏற்பட்ட பெருமழை, வெள்ளப்பெருக்கு, கடும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும் என்று மீட்புப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.  தெரசாபோலிஸ், நோவாஃபிரைபர்கோ, பெட்ராபோலிஸ் ஆகிய நகரங்களும் பல கிராமங்களும் இந்த வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பெருமளவுக்குச் சேதம் அடைந்துள்ளன.  3 நாள் துக்கம்: வெள்ளம், நிலச்சரிவில் இறந்தவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் 3 நாள் அரசுமுறை துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று பிரேசிலின் புதிய பெண் அதிபர் தில்மா ரூசெஃப் சனிக்கிழமை அறிவித்தார். இந்த நாள்களில் விருந்து, கேளிக்கைகள் நடைபெறாது. தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். நாட்டு மக்கள் அனைவரும் தேசியத் துயர் களைய தங்களாலான உதவிகளைத் திரட்டித் தருவார்கள்.  இந்தச் சேதம் ரியோடி ஜெனிரோ நகரில்தான் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே அந்த மாநில அரசு வரும் திங்கள் முதல் ஒரு வாரத்துக்குத் தங்களுடைய மாநிலத்தில் அரசுமுறை துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.  14,000 பேருக்கு உதவி: ரியோ நகரிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செரானா பகுதியில் சுமார் 14 ஆயிரம் பேருக்கு உணவு, குடிநீர், மருந்து ஆகிய வசதிகளை மீட்பு, உதவிக்குழுவினர் செய்து வருகின்றனர்.  கேம்போ கிராண்டி என்ற கிராமத்தில் 2,500 வீடுகள் இருந்தன. ஆனால் இப்போது ஆள் நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறிகளே இல்லை.  4 சடல லாரிகள்: சடலங்களை எடுத்துச் செல்வதற்காக குளிரூட்டப்பட்ட பெட்டக வசதியுள்ள 4 லாரிகள் தெரசாபோலிஸ் தேவாலயத்துக்கு வெளியே தயாராக நிறுத்தப்பட்டிருக்கின்றன. மழைநீரில் ஊறியும் சேற்றில் புதைந்து அழுகியும் சடலங்கள் மீட்கப்படுவதால் அவற்றை மேலும் கெடாத நிலையில் எடுத்துச் செல்வதற்காக இந்த லாரிகள் தருவிக்கப்பட்டுள்ளன.  ஆனால் மழை, வெள்ளத்தால் பல இடங்களில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டும் அரித்துச் செல்லப்படும் கடுமையாகச் சேதம் அடைந்துள்ளன. சில பகுதிகளில் நூறடிக்கும் மேல் சாலைகளே இல்லாமல் மிகப் பெரிய பள்ளங்கள் காணப்படுகின்றன. பிரேசில் நாடு மலைப்பாங்கான பிரதேசம். இங்கே நிலச்சரிவு என்றால் முதலில் பாதிக்கப்படுவது தரைவழி போக்குவரத்துதான் என்பது நினைவுகூரத்தக்கது.  எனவே ஆம்புலன்ஸ்களும் வேன்களும் செல்ல முடியாத நிலைமை காணப்படுகிறது.  அத்துடன் மழை, பனி காரணமாக அப் பகுதிகளில் கடும் பனி மூட்டம் ஏற்பட்டுள்ளது. எனவே ஹெலிகாப்டர் போன்ற வான் ஊர்திகளையும் மீட்புப் பணியில் ஈடுபடுத்த முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இந்தக் காரணங்களால் மீட்புப் பணியும் மிகுந்த காலதாமதத்துடன் நடைபெறுகிறது.  கல்லறையிலேயே காத்துக்கிடக்கும் நாய்: இந்த சோகங்களுக்கு நடுவிலும் நெஞ்சைப் பிழியவைக்கும் காட்சி ஒன்று மீட்புப் பணியாளர்களின் கண்களைக் குளமாக்குகிறது. கிறிஸ்டினா மரியா டி சந்தானா என்ற பெண் இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருடைய உடலை தெரசாபோலிஸ் நகர கல்லறைத் தோட்டத்தில் புதைத்துவிட்டார்கள். அவர் ஆசையாக வளர்த்த நாய் இறுதிச் சடங்கின்போது கல்லறைத் தோட்டத்துக்கு வந்து அங்கு நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தது. எல்லோரும் வீட்டுக்குத் திரும்பிய போதிலும் அது திரும்பாமல் அந்த இடத்திலேயே படுத்துக்கொண்டது. அந்த நாய் இன்னமும் உணவு உண்ணாமலும் நீர் அருந்தாமலும் இறந்துபோன எஜமானி மீண்டும் வரட்டும் என்று கண்ணீரோடு காத்துக் கிடக்கிறது. யாராவது போனால் அவர்கள் தங்கள் எஜமானிதானா என்று பார்த்துவிட்டு, இல்லையென்று தெரிந்ததும் மீண்டும் தலையைக் கவிழ்த்து படுத்துக்கொள்கிறது.  காரிலேயே மரணம்: மீட்புப் பணியாளர்கள் ஒரு காட்டாறு ஓடி வெள்ளம் தணிந்த பகுதியில் நடந்துசென்ற போது ஒரு காரைப்பார்த்துவிட்டு அருகில் சென்றனர். அதில் ஒரு குடும்பத்தார் அப்படியே வெள்ள நீரில் மூச்சுத்திணறி இறந்து இருக்கைகளில் உட்கார்ந்திருந்தனர். காரில் செம்மண் நிறத்தில் சேறு அப்பியிருந்தது. வெள்ள நீர் உள்ளே புகுந்து பல மணி நேரம் இருந்துவிட்டு பிறகு வடிந்திருக்கிறது.  வெறும் சேறுதானே என்று காலால் கிளறினால் அங்கிருந்து கையோ, காலோ, முழு உடலோ வெளியே வரும் அளவுக்கு அந்த இடம் முழுக்க சடலங்களாகவே நிரம்பியிருக்கிறது.

No comments:

Post a Comment