Sunday, January 16, 2011

சூடானை இரண்டாக பிரிக்க ஓட்டெடுப்பில் முழு ஆதரவு

ஆப்ரிக்காவின் சூடான் நாட்டில், பிரிவினைக்காக நடத்தப்பட்ட பொது ஓட்டெடுப்பு முடிவடைந்தது. இதையடுத்து, ஐரோப்பா வாழ் சூடானியர்களிடையே நடத்தப்பட்ட ஓட்டெடுப்பு எண்ணிக்கை பற்றிய முடிவு நேற்று அறிவிக்கப்பட்டது. அதில், ஐரோப்பா வாழ் சூடானியர்கள், பிரிவினைக்கு ஆதரவாக பெரும்பான்மை விகிதத்தில் ஓட்டளித்திருந்தனர்.

ஆப்ரிக்க நாடான சூடானில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தால் 2005ல் மேற்கொண்ட அமைதி ஒப்பந்தப்படி, கடந்த 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை, நாடு இரண்டாகப் பிரிவது குறித்த பிரிவினைக்கான பொது ஓட்டெடுப்பு நடந்து முடிந்தது.
இதில், உள்நாடு மற்றும் ஐரோப்பா வாழ் சூடானியர்கள் கலந்து கொண்டு ஓட்டளித்தனர். நேற்று முன்தினம் ஓட்டுப் பதிவு முடிவடைந்ததை அடுத்து, முதல் நடவடிக்கையாக ஐரோப்பா வாழ் சூடானியர்களின் ஓட்டுகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி, பதிவான 640 ஓட்டுகளில் 97 சதவீதம் ஓட்டுகள், புதிய நாடு உருவாவதற்கு ஆதரவாக அளிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, நூற்றுக்கணக்கான சூடானியர்கள் இந்த வெற்றியை ஆரவாரத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடினர். ஓட்டெடுப்பின் முழு முடிவுகளும், பிப்ரவரி 6 அல்லது 14ம் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment