Sunday, January 16, 2011

தூத்துக்குடி - கொழும்பு கப்பல் சர்வீஸ் : இரண்டு கப்பல் வாங்குகிறது இலங்கை

"தூத்துக்குடி - கொழும்பு இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து துவங்கவுள்ளதால், இதற்காக அனைத்து வசதிகளுடன் கூடிய இரண்டு பயணிகள் கப்பலை வாங்க திட்டமிட்டுள்ளோம்' என, இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இலங்கை துறைமுகத் துறை இணை அமைச்சர் ரோகிதா அபயகுணவர்த்தனே கூறியதாவது: இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்படி, கொழும்பு - தூத்துக்குடி, தலைமன்னார் - ராமேஸ்வரம் இடையே, 25 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கப்பல் போக்குவரத்து துவங்கவுள்ளது. இந்தியா சார்பில் வாரத்துக்கு நான்கு முறையும், இலங்கை சார்பில் வாரத்துக்கு மூன்று முறையும் கப்பல்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, விரைவில் இரண்டு பயணிகள் கப்பல்களை வாங்க திட்டமிட்டுளோம். இதுகுறித்து ஐரோப்பாவைச் சேர்ந்த இரண்டு கப்பல் நிறுவனங்களிடம் பேசி வருகிறோம். நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் இந்த கப்பல்கள் வாங்கப்படும். பயணிகளின் நலன் கருதி, நவீன வசதிகளைக் கொண்ட கப்பல்களை வாங்க திட்டமிட்டுளோம். பயணிகள், தூங்குவதற்கும் இந்த கப்பலில் வசதி ஏற்படுத்தப்படும்.
கொழும்பு துறைமுகத்தை நவீனப்படுத்தவும் முடிவு செய்துள்ளோம். இந்த கப்பல் போக்குவரத்து, வர்த்தகர்கள், சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்தியாவிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இலங்கை வருவதற்கும் வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு ரோகிதா கூறினார்.

No comments:

Post a Comment